குர்ஆனின் முதல் வசனமே... ’ஓதுவீராக உம்மைப் படைத்த இறைவனின் பெயரால் அவனே எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்’ என்கிறது. ’கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடிக் கண்டறிந்து கொள்ளுங்கள்’ ’சீன தேசம் சென்றாவது சீர் தரும் கல்வியைத் தேடுங்கள்’ என்பது பொன்மொழிகள். முஆது என்னும் தோழரை ஏமன் நாட்டுக்குத் தன் பிரதிநிதியாக அனுப்பினார் நாயகம். அப்போது அங்கே ஏதும் பிரச்னை வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் எனக் கேட்க “குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்” என்றார். நாயகமோ “தீர்வு கிடைக்காமல் போனால்...” எனக் கேட்டார். “உங்கள் சொல், செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து பிரச்னையை தீர்ப்பேன்” என்றார். ’அதிலும் கிடைக்காவிட்டால்...’ எனக் கேட்டார். “இந்த இரண்டின் அடிப்படையுடன் என் சொந்த அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண்பேன்” என விடையளித்தார். உடனே “நீர் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்” எனச் சொல்லி மகிழ்ந்தார். “கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால் இறைவனின் பாதையில் பயணம் செய்கிறான்” என்கிறார் நாயகம்.