“நீ விசுவாசம் நல் மனசாட்சியும் உடையவனாயிரு! இந்த நன்மனச்சாட்சியை கைவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” என்ற பைபிள் வசனத்தை மனதுக்குள் சொல்லியபடி வந்து கொண்டிருந்தார் ஒருவர். வழியில், ரயில் பாதையைக் கடக்க பாலத்தில் மீதேறினார். அந்த ஸ்டேஷன் மூலையில், பழைய ரயில் பெட்டிகள் உடைந்து கிடப்பதைப் பார்த்தார். “இந்த பெட்டிகள் புதிதாக இருந்த போது எத்தனை பேரை ஏற்றிச் சென்றிருக்கிறது. எத்தனை ஊர்களுக்கு போயிருக்கிறது. அன்று அருமையாய் ஓடிக்கொண்டிருந்த இந்த பெட்டிகள் இன்று ஆகாதவைகளாய் போய்விட்டதே!” என வருந்தினார். அப்போது கடவுள் தோன்றி, “மகனே! இந்த ரயில் பெட்டிகள் உபயோகப்படாமல் போனது போல, நிறைய மக்களும் இன்று பயன்படாமல் போய்விட்டார்கள். அவர்களை நான் நல்லபடியாகத் தான் பூமிக்கு அனுப்பினேன். இப்போதோ, தடம் புரண்டு போன இந்த ரயில் பெட்டி போல பயனற்றுப் போனார்கள். சிலரை பணம் வீழ்த்தியது. சிலரை வேறு சில ஆசைகள் வீழ்த்தின. இன்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் தேவநாமத்திற்கு இழுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றார். பரவசம் அடைந்த பக்தர், “ஆண்டவரே! கடைசி மூச்சுவரை உமக்காக ஓடிக்கொண்டே இருக்க உதவி செய்யும். என்னைக் காத்துக் கொள்ளும். உம் வழிகளிலே உத்தமமாய் ஓட அனுக்கிரகம் செய்யும்” என பிரார்த்தித்தார். நாமும் மனசாட்சியை சேதப்படுத்தாமல் கடவுளுக்கு விசுவாசமாக இருப்போம்.