பதிவு செய்த நாள்
13
பிப்
2019
01:02
தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில், ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவானின் திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும். ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகு பெயர்ச்சி எனப்படுகிறது.
அதன்படி இன்று(பிப்.,13ல்) மதியம் 1.24 மணிக்கு ராகுபகவான் கடக ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனையும், பின்னர் 14-ம் தேதி முதல் 16ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது. 11-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில், இன்று பகல் 12 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மஞ்சள், திரவியம் போன்ற பொருட்களால் மகா அபிஷேகமும், சிறப்பு பாலாபிஷேகமும் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ள பெருமளவில் குவிந்தனர். இதில் தமிழகம் மட்டுமில்லாது,வெளி மாநில, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.