பதிவு செய்த நாள்
19
பிப்
2019
11:02
திருவொற்றியூர்: தியாகராஜர் கோவில், மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், நேற்று, வெகு விமரிசையாக நடந்தது.
திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி பிரம்மோற்சவம், 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம், நேற்று காலை நடைபெற்றது. இதில், கல்யாணசுந்தரர் – திரிபுரசுந்தரி தாயார், பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை, 9:00 மணிக்கு துவங்கிய திருமண வைபவத்தில், வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.
கல்யாணசுந்தரருக்கு, பூணுால் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நிகழ்வுகள் அரங்கேறின. இதையடுத்து, 10:15 மணிக்கு, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் இனிப்பு பரிமாறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பால், பழம் கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஆங்காங்கே தாலிக்கயிறு வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில், 63 நாயன்மார்கள் வீதி உலா, இரவு மகிழடிசேவை நடைபெற்றது.