பதிவு செய்த நாள்
19
பிப்
2019
12:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருவிழாயொட்டி, நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பஞ்சமூர்த்திகளின் ஐந்து தேர்களை வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மணிமுக்தா நதிக் கரையில் அமைந்துள்ள, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து நந்தி, பஞ்ச மூர்த்திகள், ஐந்து பிரகாரம், ஐந்து தேர், பஞ்ச தீர்த்தம் என ஐந்தின் சிறப்புகளாக விளங்குகிறது. ‘காசியிலும் வீசம் பெரிதான விருத்தகாசி’ எனும் பெருமை உடையது. இக்கோவிலில், 12 நாள் நடைபெறும் மாசி மகப் பெருவிழா, கடந்த 8ம் தேதி, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றத்துடன் நடந்தது. தினசரி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விசஷே வாகனங்களில் வீதியுலா நடந்தது. கடந்த 15ம் தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலை பிரதிஷ்டை செய்த விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்த ஐதீக திருவிழா நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விநாயகர் காலை 5:30 மணிக்கு தனித்தேரில் நான்கு கோட்டை வீதிகள் வழியாக உலா வந்தார்.
தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் பவனி வந்தனர். தேரோட்டத்தை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் லட்சுமிநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை, மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை மற்றும் உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று மாசி மகத்தையொட்டி, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுடன், தீர்த்தவாரியும், 20ம் தேதி வள்ளி, தெய்வயானை சமேத சண்முகர் தெப்ப உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி சண்டிகேஸ்வரர் வீதியுலா நடக்கிறது.