பதிவு செய்த நாள்
19
பிப்
2019
01:02
காரைக்குடி: காரைக்குடி அருகே மாத்துார் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் பிரமோற்ஸவ விழா கடந்த 10–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை 8:00 மணிக்கும் மாலை 4:00 மணிக்கும் அபிஷேகம், காலை 10:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் பஞ்சமூர்த்தி உலா நடந்தது.
சுவாமி காமதேனு, சிம்ம, ரிஷபம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4:05 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர். பெரிய தேரில் சுவாமி பிரியாவிடையுடனும், சிறிய தேரில் பெரிய நாயகி அம்பாளும், சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரரும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இன்று காலை 8:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7:00 மணிக்கு சப்தாவரணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை மாத்துார் கோயில் நகரத்தார்கள் செய்திருந்தனர்.