பதிவு செய்த நாள்
19
பிப்
2019
01:02
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கடந்த, 4ல் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:10 மணிக்கு நடந்தது.தலைமை முறைதாரர் மனோகரன், மயான அருளாளி அருண் உள்ளிட்டோர், அம்மன் சூலம் மற்றும் பூஜை பொருட்களுடன், ஆழியாற்று படுகையில் உள்ள மயானத்துக்கு வந்தனர்.
மயான மண்ணால் மாசாணியம்மன் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி, ஆற்றில் நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மன் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. எலுமிச்சைகளால், அம்மன் பீடம் அலங்கரிக்கப்பட்டது; பம்பைக்காரர்கள், பக்தி பாடல் பாடினர். எலும்புத்துண்டை வாயில் கவ்விக்கொண்டு, கையில் சூலாயுதத்துடன் அருளாளி ஆவேசமாக நடனமாடி, அம்மன் உருவத்தை சிதைத்தார். மாசாணி தாயே, பராசக்தி தாயே என, பக்தர்கள் பக்தி பரவசத்தில் குலவை எழுப்பினர். அம்மன் சிலையில் இருந்து, ஒரு பிடி மண் எடுக்கப்பட்டது. நள்ளிரவு, 3:10க்கு பூஜை நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, 6:30க்கு ஆழியாறு ஆற்றுப்படுகையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் எடுத்த பிடிமண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. வரும், 20ல் குண்டம் திருவிழா நடக்கிறது.