ஒருமுறை நபிகள் நாயகத்தை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றான் இறைவன். அங்குள்ளவர்களின் கையில் பித்தளை நகம் இருக்கக் கண்டார். நகத்தால் தங்களின் முகம், மார்புகளை குத்திக் கீறிக் கொண்டிருந்தனர்.
வான தூதரிடம், ”இவர்கள் யார்?” எனக் கேட்டார் நாயகம். அதற்கு “இவர்கள் வாழ்வில் ஒருவருடைய மாமிசத்தை மற்றவர் உண்டு வந்தனர். மக்களின் மானத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்” என்றார்.
ஒருவருடைய மாமிசத்தை இன்னொருவர் உண்பது என்பது புறம் பேசுவதைக் குறிக்கும். இதனால் ஒருவரது கண்ணியம், மானம் குலையும். இந்தக் குற்றத்துக்கு இறைவனால் கடும் தண்டனை வழங்கப்படும்.
எனவே பிறரைப் பற்றிப் புறம் பேசுவதை நிறுத்தினால் மட்டுமே, பித்தளை நகத்தால் தங்களைத் தாங்களே கீறிக் கொள்ளும் தண்டனையில் இருந்து தப்பலாம். புறம் பேசாமல் இருக்க மற்றவர் விஷயத்தில் தலையிடக் கூடாது. தீயவற்றை பார்க்க கூடாது.
”கெட்டவைகளைப் பார்க்காமல் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செய்கைகளை விட்டு, உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டு, உண்மை பேசுவதில் முனையுங்கள். இறைவனிடமிருந்து சொர்க்கத்தை வாங்கித் தர நான் பொறுப்பேற்கிறேன்” என்கிறார் நாயகம்.