புதுச்சேரி: தஞ்சை குகை ஓவியங்கள் மூலம் ராஜராஜ சோழன் எளிமையாக வாழ்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது என திருச்சி என்.ஐ.டி., கட்டடவியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் மாணிக்கவாசகம் பேசினார். அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நடந்த கருத்தரங்கில் அவர், பேசியதாவது:தஞ்சை ஓவியங்கள் கட்டட கலையில் சிறந்தது. அதன் கட்டட வல்லுனர்கள், அதை செய்தவிதம், வடிமைப்பு இன்றைக்கும் உலக அளவில் பேசப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் குகை ஓவியங்கள் 1931ல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆராய்ச்சியாளர் கோவிந்தசாமி ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்தார். அதில், நாயக்கர் கால குகை ஓவியங்கள் இருந்தன. அவற்றை ஆராய்ந்த போது, வேறு ஒரு சோழர்கால ஓவியம் இருந்தது தெரிய வந்தது. நாயக்கர் கால ஓவியம் தனியாகவும், அதன் கீழே சோழர் கால ஓவியமும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
இது கோபுரத்தின் மேலே மூன்றாவது நிலையில் உள்ளது. கோபுரத்திற்கு செல்லும் பிரதாத பாதையில் தான் இந்த சிறப்பு மிகுந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.ராஜராஜ சோழன் சிவ பக்தர் என்பதால். சுந்தரர் கையிலாயம் எப்படி சென்றார், எப்படி சிவன் ஆட்கொண்டார் என்ற விஷயங்கள் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைக்கு விஷ்வலுக்கு எப்படியெல்லாம் காட்சிகள், யுக்திகள் மேலை நாடுகளில் முன்னிறுத்தப்படுகின்றனவோ அவை கி.பி., பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் தீட்டப்பட்டுள்ளன. ஓவியத்தில் மன்னர் மிக எளிமையாக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆடம்பர ஆபரணங்கள் இல்லை. இது ராஜராஜ சோழன் எளிமையாக வாழ்ந்துள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.