பதிவு செய்த நாள்
26
பிப்
2019
03:02
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை பூஜை செய்ய பலவித புஷ்பங்கள் இருப்பினும் வைணவ நெறிமுறைகளின்படி பெரியோர்களாலும், ஆசார்யார்கள் மற்றும் ஆழ்வார்களாலும் சில புஷ்பங்கள் விசேஷமாகக் கூறப்பட்டிருக்கின்றன. பெரியாழ்வார் பூச்சூடலில் ‘ஆநிரை மேய்க்க நீ போதி ’ என்று ஆரம்பித்து, பத்துப் பாசுரங்களில் முறையே செண்பகம், மல்லி, பாதிரி, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - இப்படி எட்டுவிதமான புஷ்பங்களை எம்பெருமானுக்கு மிக உகந்ததாகச் சொல்லியிருக்கிறார். பாகவத புராணத்திலும் எம்பெருமானுக்கு வழிபாடு செய்ய ஏற்றதாக எட்டுவிதமான புஷ்பங்கள் சொல்லப்பட்டுள்ளது.
அகிம்ஸா பந்தமம் புஷ்பம் -ஜீவ ஹிம்சை செய்யாமை புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹம் -பஞ்சேந்திரியங்களை அடக்குதல், ஸர்வ பூத தயா புஷ்பம்-எல்லோரிடத்திலும் அன்பு, க்ஷமா புஷ்பம் - பொறுத்தக் கொள்ளுதல், ஞானம் புஷ்பம் -நல்லறிவு பெறுவது, தபஸ் புஷ்பம் - ஜபதபங்கள் செய்வது, த்யாநம் புஷ்பம் - இந்திரியங்களை அடக்கி பகவத் தியானம் செய்தல், ஸத்யம் புஷ்பம்- உண்மையே பேசுதல், சாதாரண மலர்களை விட மனம், காயம், வாக்கு சுத்தமாகச் செய்யப்படும் இந்தச் செயல்களே சிறந்த புஷ்பங்களாகக் கூறப்பட்டுள்ளன. சாதாரண புஷ்பங்கள் ஆயிரத்தால் செய்யும் பூஜையைவிட ஒரு தாமரை புஷ்பத்தால் செய்யும் பூஜை சிறந்தது. ஆயிரம் தாமரைப் பூக்களால் செய்யும் பூஜையை விட ஒரு துளசிதளத்தால் செய்யும் பூஜை மிகச் சிறந்தது என்கின்ற புராணங்கள்.