பதிவு செய்த நாள்
28
பிப்
2019
12:02
சேலம்: காளியம்மன் கோவில் மாசி திருவிழாவில், பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம், நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில், கடந்த, 20ல், மாசி திருவிழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, சக்தி அழைத்தலை தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். இரவில், பூங்கரகம், அக்னிகரகம், அலகு குத்துதலுடன், புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று இரவு சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராடல், மார்ச், 2ல் மறுபூஜை நடக்கிறது.
ஆடியபடி... : ஆட்டையாம்பட்டி அருகே, ராஜாபாளையம், கரிக்கட்டாம்பாளையம், மாரியம்மன் கோவிலில், கடந்த, 13ல், கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை, பூவோடு எடுத்தல் உற்சவத்தில், பூசாரி அக்னி சட்டியை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்தார். அவருடன், திரளான பக்தர்கள், அக்னி கரகத்துடன், ஆடியபடி வந்தனர். இரவில், உற்சவர் அம்மன், சப்பரத்தில் எழுந்தருளி, சத்தாபரண ஊர்வலம் வந்து அருள்பாலித்தார். இன்று மாலை, பொங்கல் வைத்தல் நடக்கவுள்ளது. நாளை காலை, மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், மாசி திருவிழா நிறைவடையும்.
பால்குட ஊர்வலம்: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்டோர், காந்தி நகர், சிவகாமி நகர், வட்டகிணறு வழியாக, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில்...: ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை, அக்னி, பூங்கரகத்துடன், அலகு குத்துதல் நடந்தது. இன்று மாலை, வண்டி வேடிக்கை, இரவு சத்தாபரணம், நாளை, மஞ்சள் நீர் மெரவனையுடன், விழா முடிவடைகிறது.
பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடக்கம்: ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவில் மாசி திருவிழா, பூச்சாட்டுதலுடன், நேற்று தொடங்கியது. அதையொட்டி, இன்று முதல், மார்ச், 3 வரை, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். மார்ச், 4ல் தீர்த்தக்குட ஊர்வலம், பச்சை மாவு மற்றும் கூழ் படைத்தல், மாலை உருளுதண்டம், அக்னி கரக ஊர்வலம் நடக்கவுள்ளது. மார்ச், 5ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அன்று ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்தல், இரவு சத்தாபரண ஊர்வலம் நடக்கிறது. மார்ச், 12ல் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடையும்.