ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மாடுகள் உலா: பக்தர்கள் பீதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2019 11:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் மாடுகள் உலா வருவதால் பீதியில் பக்தர்கள் விழுந்துகாயம் அடைகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் நீராடுகின்றனர்.
பக்தர்கள் நலனுக்காக, அக்னி தீர்த்த கரையில் குவியும் கழிவு துணிகளை சேகரித்து சுகாதாரம் பாதுகாக்கவும், கடற்கரையில் சுற்றித் திரியும் மாடு, ஆடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் அக்னி தீர்த்த கரையில் மாடுகளுக்கு கீரை தானம் செய்யும்படி பக்தரிடம் வியாபாரிகள் கீரை கட்டுகள் விற்கின்றனர். இதனை சில பக்தர்கள் மாடுகளுக்கு கொடுக்கும் போது அதனை உண்ணும் ஆவலில் ஏராளமான மாடுகள் வேகமாக வருகின்றன. இதனை கவனிக்காமல் நிற்கும் பக்தர்களை முட்டி தள்ளுவதால், பலர் காயம் அடைகின்றனர். மாடுகளை தொழுவத்தில் கட்டி பராமரிக்க முன்வராத உரிமையாளர்கள், மாடுகளை வேண்டுமென்றே அக்னி தீர்த்த கரையில் உலா விடுகின்றனர். இந்த மாடுகளை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும், அடுத்த ஒருசில நாட்களில் மீண்டும் மாடுகள் அக்னி தீர்த்த கரையில் சுற்றித் திரிகிறது. எனவே பக்தர்களை பாதுகாக்க மாடுகளை தொழுவத்தில் பராமரிக்க கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட வேண்டும்.