குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருந்திருவிழாவை யொட்டி வரும் மூன்றாம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற கடம்பவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த 27ம் தேதி விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இன்று (1 ம் தேதி) இரவு ஏழு மணிக்கு கைலாயமலை தாமரை வாகனங்கள் ஊர்வலமும், நாளை இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் மூன்றாம் தேதி இரவு ஏழு மணிக்கு திருகல்யாண உற்சவம், நான்காம் தேதி, ஐந்தாம் தேதிகளில் பல்லக்கு ஊர்வலம், ஆறாம் தேதி காலை ஆறு மணிக்கு திருத்தேர் ரதாரோஹனம், இரவு ஏழு மணிக்கு வண்டிக்கால் பார்த்தல், ஏழாம் தேதி மதியம் 12 மணிக்கு காவேரி ஆற்றில் தீர்த்தவாரி, எட்டாம் தேதி இரவு ஏழு மணிக்கு முத்துபல்லக்கு, ஒன்பதாம் தேதி இரவு சண்டிகேசுவரர் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.