திருமூர்த்திமலை கோவில் மகாசிவராத்திரி விழா
பதிவு செய்த நாள்
05
மார் 2019 02:03
உடுமலை: திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழாவிற்கு, பூலாங்கிணரிலிருந்து கிளம்பிய திருச்சப்பரத்திற்கு வழியோர கிராமங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வளம் பெருக வேண்டி, பக்தர்கள் சப்பரத்தின் மீது, தானியங்கள், பழங்கள் முதலியவற்றை அர்ப்பணம் செய்து வழிபட்டனர்.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமாக பக்தர்கள் வரும் நிலையில், சுற்றுப்புற பகுதி விவசாயிகள், கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபட்டு வருகின்றனர்.
தை மற்றும் ஆடி பட்ட சாகுபடிக்கு முன், அமாவாசை தினம், மாட்டு வண்டிகளை கட்டி வருகின்றனர். அதே போல், மகா சிவராத்திரி விழாவும், இதனையொட்டி, கிராமங்களில் திருச்சப்பர திருவீதி உலாவும், பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வருவதையும் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.பூலாங்கிணர் கிராமத்தில், திருமூர்த்திமலை மகா சிவராத்திரி விழாவிற்காக திருச்சப்பரம் உள்ளது. இந்தாண்டு, சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் பூலாங்கிணர் கிராமத்திலிருந்து திருச்சப்பரம் கிளம்பியது. நேற்று, வாளவாடி, தளி, திருமூர்த்திநகர் வழியாக, திருமூர்த்திமலைக்கு, திருச்சப்பரம் வந்தடைந்தது.வழியோர கிராமங்களில், சப்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்த மக்கள், வேளாண் வளம் செழிக்க, மொச்சை, சுண்டல், கொள்ளு என தானியங்கள், உப்பு, பழம் ஆகியவற்றை அதன் சப்பரத்தின் மீது அர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், சப்பரத்துடன், பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். திருச்சப்பரம் திருமூர்த்திமலை கோவிலை வந்தடைந்ததும், இரவு, 8:00 முதல் கால பூஜை, அபிஷேகம், தீபாராதனையும், இரவு, 10:00க்கு, இரண்டாம் கால பூஜை, இன்று, அதிகாலை, 2:00க்கு, மூன்றாம் கால யாக பூஜை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், 16 தீப மகா தரிசனம் மற்றும் தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது. இரவு முழுவதும், கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் வசதிக்காக, இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
|