பதிவு செய்த நாள்
06
மார்
2019
02:03
மஞ்சூர்:மஞ்சூர் அருகே எடக்காட்டில் சிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.மஞ்சூர் அருகே எடக்காட்டில் புகழ் பெற்ற மலையாம் பெட்டுகுடி சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை எடக்காடு நடுஹட்டி, சூண்டட்டி, தலையட்டி , முக்கிமலை கிராம மக்களின் குல தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோயிலில் நேற்று (மார்ச்., 5ல்) நடைப்பெற்ற மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, காலை, 10:30 மணியளவில் மூங்கில் குச்சிகள் மூலம் உராய்வு செய்து அதிலிருந்து வரும் நெருப்பிலிருந்து சுவாமிக்கு தீபத்தை ஏற்றினர்.விரதம் இருந்த பக்தர்கள் புதிதாக ஈன்ற பசு மாட்டில் பாலை கறந்து, அந்த பாலை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தனர். படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையுடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிப்பட்டனர். தொடர்ந்து, ஆடல், பாடல் பஜனை நிகழ்ச்சியும், படுகர் இன கலாச்சார நடனம் நடந்தது.இதேபோல், அன்னமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேல்குந்தா, முள்ளிகூர்,கீழ்குந்தா, முள்ளிமலை, இத்தலார், மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.