நாயக்கர் கால நடுகற்கள் கண்டெடுப்பு
பதிவு செய்த நாள்
10
மார் 2019 01:03
திருப்பத்தூர்: நாயக்கர் கால நடுகற்கள், திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அருகே, புள்ளனேரியில் வசிக்கும் பொதுமக்கள், அங்குள்ள வேடியப்பன் கோவிலில் உள்ள பலகை கற்களை, சலவை செய்ய பயன்படுத்தி வந்தனர்.
இந்த கற்களை ஆய்வு செய்தபோது, கி.பி., 15ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த, மூன்று நடுகற்கள், இரண்டு சதிகற்கள் என்பது, தெரியவந்தது. முதல் நடுகல்லில், நான்கு அடி உயரம், கையில் வில்லும், அம்பும் ஏந்தி, வீரன் ஒருவன் காட்சி அளிக்கிறான். இரண்டாவது நடுகல்லில், போரிடும் கோலமின்றி, இடது கையில், வில்லை தரையில் ஊன்றி, வலது கையில் குறுவாள் ஒன்றை ஏந்தி, பெரிய கொண்டை வீரன் காட்சி அளிக்கிறான். மூன்றாவது நடுகல், வீரனின், வில் ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. அதாவது, வீரன் ஒரே அம்பை விடாமல், மூன்று அம்புகளை, ஒரே சமயத்தில் விடும் திறன் கொண்டவராக இருப்பதை, காட்டுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த, வில் ஆற்றல் கொண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான, ஓரியை இந்த நடுகல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்பகுதியில் நீண்ட காலமாக போர் நடந்துள்ளது, தெரியவருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
|