சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் காமன் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இங்குள்ள மலையடிவாரத்தில் மங்கைபாகர் தேனம்மை கோவிலையொட்டி ரதி மன்மதனுக்கு தனியாக கோவில் உள்ளது. இக்கோவிலில் காமன் திருவிழா மார்ச் 9 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி இரவு 7:30 மணியளவில் ஆலைக்கரும்பு, பேய்க்கரும்பு, ஆமணக்கு இலை தர்ப்பைப்புல், வைக்கோல் கொண்டு காப்புமரம் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜை செய்யப்பட்டு மரத்தில் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து காப்பு மரம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தது. பின்னர் கோவில் முன்பாக உள்ள பீடத்தில் நடப்பட்டது. கோவிலில் ரதி மன்மதன் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவையொட்டி 15 நாட்கள் ரதி, மன்மதன் வேடமிட்ட ஆண்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று ரதி மன்மதன் வரலாறை பாட்டாக பாடியும், ஆடியும் மக்களுக்கு எடுத்துக்கூறுவார்கள். 15 ம் நாளான மார்ச் 23 ம் தேதி காமன் திருவிழா நடக்கும். அன்றைய தினம் மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்து அழிக்கும் காமன் தகனம் நடைபெறும். மறு நாள் மார்ச் 24 ம் தேதி மன்மதனை உயிரெழுப்பும் விழா நடக்கிறது.