பதிவு செய்த நாள்
12
மார்
2019
10:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மாசி திருத்தேர் விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 5 ஆம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அமாவசையன்று மயான கொள்ளையும், 9 ம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய திருவிழாவான திருதிதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் சக்தி இழந்து திரியும் சிவபெருமன் மகா சிவராத்திரி இரவு மேல்மலையனுார் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் மயானத்தில் நடக்கும் மயான கொள்ளையில் பார்வதி தேவி அங்காளபரமேஸ்வரியாக விஸ்வரூபம் எடுத்து சிவனின் கரத்தில் உள்ள பிரம்ம கபாலத்தை ஆட்கொள்கிறார். இதன் பிறகு பித்து தொளியும் சிவபெருமான் சாபவிமோசனம் பெற்று ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்.
இதில் விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனின் கோபம் தனிய தேவர்கள் தேரின் பாகங்களாக மாரி அம்மனுக்கு எடுக்கும் விழாவே இங்கு ஆண்டு தோறும் மாசி பெருவிழாவாக நடந்து வருகிறது. இங்கு தேர் வடம் பிடித்து அம்மனை தரிசித்தால் அங்காளம்மனின் அருள் மட்டுமின்றி சகல தேவர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று மாலை 2.50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் ஏற்றினர். 3 மணிக்கு வடம் பிடித்தல் துவங்கியது. அப்போது கூடியிறுந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மன் சரண கோஷம் முழுங்க வடம் பிடித்தனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
தேர் பவனியின் போது பக்தர்கள் நேர்த்திகடனாக காய்கனிகள், தானியங்கள், நாணயங்கள், உணவு பொருட்கள், பழங்களை தேரின் மீது வாரி இறைத்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.