பதிவு செய்த நாள்
12
மார்
2019
12:03
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலின், பங்குனி பெருவிழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகமாக துவங்கியது. தொண்டை மண்டல சிவ தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும், பங்குனி மாதம், 10 நாட்கள் பெருவிழா, விடையாற்றி கலை விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் சென்னை, புறநகர் மட்டுமின்றி, வெளி ஊர்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து, ஈஸ்வரனை தரிசனம் செய்வர். கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை, 6:00 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:40 மணிக்கு கொடியேற்றம் துவங்கியது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின், 2ம் நாளான இன்று காலை, 8.30 மணிக்கு வெள்ளி சூர்யா வட்ட அலங்காரத்தில் கற்பகாம்பாள் உடன் கபாலீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9 மணிக்கு சந்திர பிரபை காட்சியும் நடைபெறுகிறது. நாளை அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் முலைப்பால் விழா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான அதிகாரநந்தி சேவை, தேர், அறுபத்து மூவர் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும், போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாடவீதிகளை சுற்றி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நான்கு வீதிகளிலும், 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்படுகின்றன. திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலிலும், பங்குனி மாதப் பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.