ஊட்டி:நீலகிரியில் உள்ள முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, நீலகிரி மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் கோவிலில் தேர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று, (11ம் தேதி) நடக்கிறது.விழாவையொட்டி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொக்காபுரம் பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இன்று நடைபெறும் தேர் திருவிழாவை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து தேரை வடம் பிடித்து துவக்கி வைப்பார்.
அதிகாரிகள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி கூடுதல் டி.எஸ்.பி., கோபி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.குற்ற சம்பவங்களை தடுக்க, கோவில் வளாகத்தில், ஆறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எட்டு இடங்களில் நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக இன்று இரவு தொரப்பள்ளி சோதனை சாவடி வழியாக இரவு நேரத்தில் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.