குயவன்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2019 11:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள குமர குருபர சுப்பிரமணியசுவாமி என்ற சுப்பையா சாது சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. மார்ச் 12 ல் ரிஷப லக்கனத்தில் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு ஆறு கால அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கிறது. தினசரி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை கோ.பெரியசுவாமிகள் தேவாரம், திருப்புகழ் பாராயணம் செய்கிறார்.
மார்ச் 20 ல் மாலை 6:00 மணிக்கு பூ வளர்த்தல் பூஜை நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு காவடிகள் பூவிலிறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. குயவன்குடி களஞ்சியம் சுவாமிகள் திருப்புகழ் பெருமை பற்றியும், வாலாந்தரவை கோ.பெரியசுவாமி சுவாமிகள் பன்னிரு திருமுறை பற்றியும் இரவு 8:00 முதல் 10:00 மணி வரை சொற்பொழிவாற்றுகின்றனர். தேச மங்கையர்கரசி இரவு 10:00 மணிக்கு முருகனின் முகவரி பற்றியும், லதா, அன்பேசிவம் பற்றியும் சொற்பொழிவாற்றுகின்றனர். அன்று இரவு முழுவதும் பால்குடங்கள், இளநீர் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பக்தர்கள் அலகு குத்தி காவடிகள் எடுத்தும், அக்கினி சட்டி எடுத்து வந்து பூவிலிறங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.