பதிவு செய்த நாள்
15
மார்
2019
11:03
காஞ்சிபுரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் கோவில் உற்சவருக்கு, ஜடிபந்தனம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், சிலை சேதமடையாமல் இருக்க, உற்சவ வீதியுலா வாகன சக்கரங்களில் ரப்பர் பொருத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் உற்சவர் விவகாரம், 2015ல் இருந்து, தற்போது வரை பேசும் பொருளாக மாறியுள்ளது.காரணம், கோவிலில் உள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான உற்சவரை மாற்றக்கூடாது என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய சட்ட போராட்டமே! இந்நிலையில், இந்தாண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழாவுக்கு, பழைய உற்சவர் சிலையை பயன்படுத்துவதில், பிரச்னை எழுந்தது.இதனால், பக்தர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பழைய உற்சவர் சிலையை வைத்தே, சுவாமி வீதியுலா நடத்த வேண்டும் என, மூன்று நாட்களுக்கு முன், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உற்சவ விழா: இதையடுத்து, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பங்குனி உத்திர விழா பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சீரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று மாலையில் பழைய சிலைக்கு குடமுழுக்கு நடந்தது. பணி முடிந்தது இது குறித்து, அறநிலையத் துறை இணை ஆணையர், தனபால் கூறியதாவது;பழைய உற்சவர் சிலை சீரமைப்பு, 100 சதவீதம் முடிவடைந்து விட்டது. இனி அனைத்து விழாக்களுக்கும் இந்த சிலையை பயன்படுத்தலாம். வழக்கத்தை விட, பெரிய மாலையே சுவாமிக்கு அணிந்து சென்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: இனி வரும் காலங்களில், ஜடிபந்தனம் செய்யப்பட்ட உற்சவர் சிலை, மேலும் பழுதாகாமல் இருக்க, சிலையுடன் கட்டப்படும் சாரங்கள், இருகாமல் இருக்க வேண்டும்.மிக முக்கியமாக, வீதியுலா செல்லும் வாகனங்களின் சக்கரங்களில், ரப்பர் பொருத்த வேண்டும்.இரும்பு சக்கரத்தை உருட்டி செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால், சிலை பழுதாக வாய்ப்பு உள்ளது. எனவே, சக்கரங்களில் ரப்பர் பொருத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உற்சவர் சிலை மீண்டு வந்த பாதை!: கடந்த, 2015ல், பழைய உற்சவர் சிலை சேதம்; சுவாமி வீதியுலாவுக்கு புதிய சிலை செய்து, பயன்படுத்தப்படும் என, இந்து அறநிலையத் துறை அறிவித்தது.l கடந்த, 2016ல் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.l கடந்த, 2017ல், புதிய சிலை குறித்து பக்தர்கள் அளிக்கும் புகாரை வழக்கு பதிவு செய்யும்படி, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சிலையை ஆய்வு செய்தனர்.l ஆய்வுக்கு பின், சிலையில் தங்கம் சேர்க்கப்படவில்லை எனக்கூறி, கோவில் செயல் அலுவலர், முருகேசன், ஸ்தபதி உள்ளிட்ட, ஒன்பது பேர் மீது, சிலை தயாரிப்பில் முறைகேடு என, வழக்கு பதியப்பட்டது.
* கடந்த, 2017, 2018ல், பழைய உற்சவர் சிலைக்கு பதில், புதிய சிலையில், பங்குனி உத்திர விழா நடந்தது.l பின், புதிய சிலையை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்; தற்போதும், அங்கு தான் சிலை உள்ளது.
* இந்தாண்டு பங்குனி உத்திர விழாவுக்கு பழைய உற்சவர் சிலையை பயன்படுத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உற்சவம் நடக்கிறது.