மேட்டுப்பாளையம்:சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் அருகேவுள்ள காமங்கொரையில் விநாயகர், கருப்பராயர் கோவில், பத்திரகாளியம்மன், காளியாதேவி, காமாட்சியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் ஆன்மீக திருப்பணிகள் செய்யப்பட்டன.இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 12ம் தேதி துவங்கியது.
இலுப்பபாளையம் பவானி ஆற்றின் கரையில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் வீரமாஸ்தி அம்மன் கோவிலிலிருந்து புனித தீர்த்தக் குடங்கள் மற்றும் முளைப்பாரியுடன் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். வேள்வி பூஜைகள் நடந்தன.நேற்று முன்தினம் (மார்ச்., 13ல்) காலை, 9:00 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் லிங்காபுரம், காந்தவயல், இலுப்பபாளையம் உள்பட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.