பதிவு செய்த நாள்
02
மார்
2012
11:03
மாமல்லபுரம் :திருக்கழுக்குன்றம் அருகே, பாலாற்றில், பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த, ஆனூர் கிராமத்தையொட்டி பாலாற்றில், கடந்த மாதம் அரசு மணல் குவாரி துவக்கப்பட்டது. நேற்று காலை 6.30 மணிக்கு, ஆற்றுக்குள், கூலித் தொழிலாளர்கள் மணல் அள்ளினர். அப்போது, கருங்கல் சிலை இருப்பதைக் கண்டனர். அதை எடுத்து சுத்தம் செய்த போது, வேதநாராயணப் பெருமாள் சிலை என்பது தெரிந்தது. சிலை, நான்கடி உயரம் கொண்டது. பெருமாள் அமர்ந்த கோலத்தில், சங்கு, சக்கரம் ஆகியவற்றை தாங்கியபடி, நான்கு கைகளுடன் உள்ளார். இடதுகால் மடித்தும், வலது கால் தொங்கியபடியும் உள்ளது. தகவலறிந்த பொது மக்கள், திரண்டு வந்து சிலையைப் பார்வையிட்டனர். இது குறித்து, ஊராட்சித் தலைவர் தேவி விஜயகுமார், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., செல்லப்பா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் அமீர் உசேன் ஜஹாங்கீர் ஆகியோர், நேரில் சென்று சிலையை பார்வையிட்டனர். அங்குள்ள கோவிலில், சிலையை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி, கிராமப் பிரமுகர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து, அங்குள்ள வேதநாராயணப்பெருமாள் கோவில் அர்ச்சகர் ராமண்ணா கூறும்போது, "இங்கு, பழமையான வேதநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிலையை போன்றே, ஆற்றில் கிடைத்த சிலையின் தோற்றமும் உள்ளது என்றார்.