ஆழ்வார்குறிச்சி:சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் புதிய கொடிமரம் அமைப்பதற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 62அடி தேக்கு தடி கொண்டு வரப்பட்டுள்ளது.சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவஸ்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சிவசைலநாதரும், பரமகல்யாணி அம்பாளும் மேற்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷமாகும். கடந்த ஆண்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்து சில மாதங்களில் இங்குள்ள கொடிமரம் திடீரென சரிந்து முறிந்தது. தற்போது அமால்கமேஷன் குழுமம் சார்பில் புதியதாக சுமார் 62 அடி நீளமுள்ள தேக்கு மரத்தடி அச்சன்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடியை சுமார் 52அடி நீளமுள்ளதாக மாற்றியமைத்து புதிய கொடிமரம் உருவாக்கப்பட உள்ளது. சுமார் 5 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தடி கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கொடிமரம் அமைக்கப்பட உள்ளதால் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய கொடிமரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு சுற்று வட்டார பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.