பதிவு செய்த நாள்
19
மார்
2019
11:03
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பங்குனி பெருவிழா, 11ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாளான நேற்று முன்தினம், தேர்த்திருவிழாவும் நடந்தன.
விழாவின், பிரதான நாளான நேற்று, அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. நேற்று மாலை, 3:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் கொடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் காட்சி அளித்தார். மாலை, 4:00 மணிக்கு வெள்ளித்தேரில், கபாலீஸ்வரர் முன் செல்ல, அறுபத்து மூன்று நாயன்மார்களும் பின் தொடர்ந்தனர். இந்த ஊர்வலத்தில், மயிலாப்பூரில் உள்ள பிரதான கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் பங்கேற்றனர்.நான்கு மாட வீதிகள், தெப்பக்குளம் சாலையிலும் வலம் வந்த நாயன்மார்களை காண, சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.நேற்று இரவு, சந்திரசேகரர் பார் வேட்டை விழாவும், ஐந்திரு மேனிகள் விழாவும் நடந்தன.அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை முதல், மாட வீதிகளில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பாதுகாப்பிற்காக, மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன; பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.