பதிவு செய்த நாள்
21
மார்
2019
01:03
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்த, கொண்டம்பட்டி அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, பால்மரம் வெட்டுதலுடன் துவங்கியது.
கடந்த, 12ம் தேதி கொடிமரம் கட்டுதலும், 18ம் தேதி குண்டம் இறங்குபவர்களுக்கு கங்கணம் கட்டுதல், அம்மனுக்கு முத்துடைத்து முகம் செலுத்துதல் நிகழ்ச்சிகளுடன் நள்ளிரவு, 12:00 மணிக்கு மயான பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்), குண்டம் திறந்து பூ போடுதல் மற்றும் ஆற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று (மார்ச்., 20ல்), அதிகாலை, 5:00 மணிக்கு, அம்மன் அழைப்பு, 6:30 மணிக்கு பக்கதர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது.
பக்தர்கள் குண்டம் இறங்கி பூமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 3:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நாளை, (மார்ச்., 22ல்) மஞ்சள் நீராடலும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு அபிஷேக, அலங்கார ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.