திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. நான்கரைமணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையை சுற்றி தேர் ஆடி அசைந்து வந்தது.
இங்குள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா 14ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை ௫:30 மணிக்கு உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பச்சை மற்றும் மஞ்சள் பட்டால் பரிவட்டம் கட்டப்பட்டு, கோயில் முன் நிலை நிறுத்தப்பட்ட பெரிய வைரத் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.கோயிலில் கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சார்யார் சுவாமிநாதன் தேரில் ஏறி வெள்ளை வீசியதும், பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். காலை 6:20 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர், நான்கரை மணிநேரம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் நகர்ந்து வந்து, காலை 10:50 மணிக்கு நிலை நின்றது. பின் கோயில் நடை திறந்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.