பதிவு செய்த நாள்
26
மார்
2019
12:03
அவிநாசி : திருமுருகன்பூண்டியிலுள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, மகா சதாசிவமூர்த்தி சிலை, பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிற்பக்கலை கூடங்கள் உள்ளன. இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள், வெளிநாடு, வெளிமாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. அவ்வகையில், சாமுண்டீஸ்வரி சிற்ப தொழிற்சாலையில், உருவாக்கப்பட்ட மகா சதாசிவமூர்த்தி சிலை, பக்தர்களை பரவசத்தில் ஆழத்தியது. ஊத்துக்குளியிலிருந்து கொண்டு வரப்பட்ட, நான்கு டன் எடையுள்ள கல்லில், இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. 25 தலை, 50 கைகளுடன், பிரம்மாண்டாக சிலை காட்சியளிக்கிறது. சிவபெருமானின், 64 அவதாரங்களில் இதுவும் ஒன்று.சிலை தயாரிப்பு குழு தலைவர் சிற்பி சண்முகம் கூறியதாவது:சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரம், பிரித்யங்கரா தேவி கோவிலில், இந்த மகா சதாசிவமூர்த்தி சிலை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஏழே கால் அடி உயரம், 3 டன் எடை கொண்ட இச்சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. தலை மற்றும் கைகள் ஒரே அளவாக, மிக துல்லியமாக வடிவமைத்தோம். 10 சிற்பக்கலைஞர்கள் இணைந்து, 6 மாதத்தில் உருவாக்கினோம்.இவ்வாறு, அவர் கூறினார்.