பதிவு செய்த நாள்
05
மார்
2012
10:03
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில், இந்திய - இலங்கை பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன், அந்தோணியார் தேர் பவனி நடந்தது. கச்சத்தீவில் நேற்று முன்தினம் நடந்த புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றம், சிலுவைப் பாதை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு, திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் தாமஸ் சவுந்திரநாயகம் தலைமையில் நடந்த திருப்பலியில், திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு வின்சென்ட், சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், ராமேஸ்வரம் வேர்கொட்டு பாதிரியார் மைக்கேல்ராஜ், யாழ்ப்பாணம் மறை மாவட்ட பாதிரியார்கள் ஆண்டனி, ஜஸ்டின் ஞானபிரகாசம், நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், தமிழகம் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் ஒற்றுமையுடன் வாழ, பிரார்த்தனை செய்தனர். காலை 9 மணிக்கு, அந்தோணியார் தேர் பவனி நடந்தது. பின், கொடி இறக்கப்பட்டு மூன்று நாள் திருவிழா முடித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கலெக்டர் இமெல்டா சுகுமாறன், கடற்படை தளபதி ரவிவிஜய குணரத்னே, ராணுவத் தளபதி மகேந்திர சதுரசிங்கே உட்பட இலங்கை அதிகாரிகள் பங்கேற்றனர். இரு நாட்டு பக்தர்களும் ஒருவருக்கொருவர் நட்பை பகிர்ந்து கொண்டனர். ராமேஸ்வரம் திரும்பிய போது இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த படகுகளை, இந்திய கடற்படையினர் சோதனை செய்து கரைக்கு அனுப்பி வைத்தனர்.
* இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்தால் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், வாழைப்பழம், பிஸ்கட், ஐஸ் கிரீம் இலவசமாக வழங்கப்பட்டது.
* இலங்கையர்களின் கடைகளில் சோப்பு, டீத்தூள், தொப்பி, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தமிழக பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
* இலவச உணவு வழங்கும் இடத்தில் நெருக்கடியில் சிக்கிய தங்கச்சிமடம் செல்வம் என்ற பெண்ணிடம் ஏழு சவரன் தங்கச்செயினும், ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 10 சவரன் தங்கச்செயினும் திருடு போனது.