பதிவு செய்த நாள்
05
மார்
2012
10:03
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அடுத்துள்ள செம்பை பார்த்தசாரதி கோவிலில், 98வது ஏகாதசி இசைத் திருவிழாவையொட்டி, சங்கீத உற்சவம் நேற்று நடந்தது. பாலக்காடு அடுத்த கோட்டாயி, செம்பை பார்த்தசாரதி கோவிலில், பத்மபூஷன் செம்பை வைத்தியநாத பாகவதரால், 1914ல் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஏகாதசி திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி திருவிழா நடக்கிறது. செம்பை பார்த்தசாரதி கோவில் 98வது கொடியேற்று உற்சவ விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், தினமும் உற்சவ விழாவும் நடந்தன. விழாவில், தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், முன்னணி இசைக் கலைஞர்களும், இசை அபிமானிகளும் பங்கேற்றனர். சங்கீத உற்சவம் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. பத்மபூஷன் விருது பெற்ற கோபாலகிருஷ்ணன் கவுரவிக்கப்பட்டார். இசைக் கலைஞர்கள் பாடும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6.00 மணிக்கு, சென்னை ராமநாதனின் சேக்ஸபோன் இன்னிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, செம்பை வைத்தியநாத பாகவதரின் பேத்தி புவனா ராமசுப்பு, விஜய் ஜேசுதாஸ், பத்மபூஷன் ஜேசுதாஸ், கலாரத்னம் ஜெயா (ஜெயாவிஜயன் ) ஆகியோரின் இசைக் கச்சேரி நடந்தது. இன்று (5ம் தேதி) பார்த்தசாரதி சுவாமிகள் ஆராட்டு வைபவத்துடன், ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.