குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே தீண்டாக்கல் அரசு கோயிலை பராமரிக்க இளைஞர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியம் கருங்கல் ஊராட்சி தீண்டாக்கல்லில் மலைக்குன்றின் மீது வீரபாண்டீஸ்வரர் கோயில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையான இந்த அரசு கோயிலுக்கு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தனியார் வசமே உள்ளன.
இந்த கேயிலுக்கு அறநிலையத்துறை அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கோயில் பராமரிப்பு இன்றி இருந்தது.இந்நிலையில் அந்த கோயில் அர்ச்சகரும் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சமூக தன்னார்வ நண்பர்கள் என்ற பெயரில் இக்கோயிலை புதுப்பித்து, தனியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
கருங்கல் சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக கோயில் பராமரிப்பின்றி உள்ளது. தற்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கோயிலை கட்ட ஆர்வம் தெரிவித்துள்ளது மகிழ்சியளிக்கிறது. கோயிலை பராமரிக்கவும், அர்ச்சகர் நியமிக்கவும், கோயில் நிலங்களை மீட்கவும் அறநிலையத்துறை முன்வர வேண்டும், என்றார்.