பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
திருப்போரூர் :திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தேரோட்ட விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சுவாமி தினசரி பூதம், புருஷாமிருகம், வெள்ளி அன்னம், தங்கமயில், யானை வாகனங்களில் உலா வந்தார். பிரதான உற்சவமான தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின் காலை 8 மணிக்கு, வள்ளி, தெய்வயானையுடன் கந்தபெருமான் தேரடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விஷேஷ தீபாராதனை நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் நான்கு மாடவீதிகளைச் சுற்றி பகல் 2 மணிக்கு நிலைக்கு வந்தது. பக்தர்கள் ஆங்காங்கே நீர், மோர், பானகம், அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். எம்.எல்.ஏ., மனோகரன், பேரூராட்சி தலைவர் சக்தீஸ்வரி, துணைத்தலைவர் சசிகலா உட்பட ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.