பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழா, நேற்று துவங்கியது. கோவில் வளாகம் துாய்மைப்படுத்தி, வேப்பிலை தோரணங்கள் கட்டி, அழகுபடுத்தப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மல்லிகை, சம்பங்கி, கோழிகொண்டை, அரளி, மருகு, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்கள், 76 மூங்கில் கூடைகளில், பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பட்டு உடுத்தி, வைர ஆபரணங்கள் அணிந்து, சூலத்தேவருடன், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை, 6:00 மணிக்கு, திருவிழா துவக்கமாக நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தேர்த்திருவிழாவில், வரும், 16ம் தேதி கம்பம் போடுதல், 18ம் தேதி, நள்ளிரவு, வாஸ்து சாந்தி மற்றும் கிராம சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கிறது.19ம் தேதி, கொடியேற்றம் மற்றும் பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 24ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் வரும், 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:00 மணிக்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளுகிறார். மாலை, 4:00க்கு, திருத்தேரோட்டம் நடக்கிறது.26ம் தேதி, இரவு, 8:00க்கு, அம்மன் பரிவேட்டை மற்றும் 11:00 மணிக்கு, குட்டைத்திடலில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 27ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. அன்று மாலை, 7:00 மணிக்கு, பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தேர்த்திருவிழானை முன்னிட்டு, வரும், 19 முதல், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தினமும், மாலை 7:30க்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 19ம் தேதி முதல், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.