பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
02:04
கடலாடி: கடலாடியில் கவுரவ செட்டியார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பழமையும், புரதான சிறப்பும் பெற்ற நல்ல காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. கடந்த ஏப்., 1ல் கணபதி ஹோமத்துடன், கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஏப்., 5ல் துள்ளுமா பூஜையும், ஏப்.,8ல் உலக நன்மைக்கான 508 விளக்கு பூஜையும் நடந்தது. நேற்று (ஏப்., 9ல்) காலை 7:00 மணிக்கு கடலாடி அருகே மலட்டாற்றில் ஊற்று தோண்டி புனித நீர் எடுத்து, காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலத்துடன் சென்று காமாட்சியம்மன், நல்ல காமாட்சியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
பக்தர்கள் கரும்பாலை தொட்டி, மாவிளக்கு, அக்னிச்சட்டிகள் எடுத்து வீதியுலா வந்தனர். இரவு 10:00 மணிக்கு பரிவார தெய்வங்களான நல்லன்னா, பெந்தன்னா, லாடன் ஒண்டிவீரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஆடு பலி கொடுத்து, 21 சாட்டை அடித்து பூஜாரி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஏப்., 10ல்) காலை 7:00 மணிக்கு உடலில் சேறு பூசிக்கொண்டு, சேத்தாண்டி வேடமும் நகர்வலமும் நடக்கிறது. இரவில் உறஸசவமூர்த்தி களின் வீதியுலா, பூச்சொரிதலுடன் ஏப்., 11ல் கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டுதலுடன்
நிறைவடையும். ஏற்பாடுகளை கவுரவ செட்டியார் மகாஜன சங்கத்தினர் பொங்கல் விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.