பதிவு செய்த நாள்
10
ஏப்
2019
02:04
சென்னை: திருநெல்வேலியில் திருடப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியில், குலசேகரமுடையார் - அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், 600 ஆண்டுகள் பழமையான, 17 பஞ்சலோக சிலைகள் இருந்தன.
இவற்றில், நடராஜர், சிவகாமி அம்மாள், ஸ்ரீபலி நாயகர், மாணிக்கவாசகர் என, நான்கு சிலைகள், 1982 ஜூலை, 5ல் திருடு போயின. இந்தச் சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என, கல்லிடைகுறிச்சி போலீசார், வழக்கை கிடப்பில் போட்டனர்.
இதுகுறித்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன். மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. அவரது தலைமையிலான போலீசார், தற்போது துப்பு துலக்கி உள்ளனர்.
திருட்டு போன நான்கு சிலைகளில், 2 அடி உயர, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள, அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதை, தமிழகத்திற்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, பொன் மாணிக்கவேல் கூறியதாவது: நடராஜர் சிலை, தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலை தான் என, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. அந்த சிலையை, 30 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்து உள்ளது.
இந்த சிலை, விரைவில் தமிழகத்திற்கு வந்து சேரும். மீதமுள்ள, மூன்று சிலைகள் பதுக்கப்பட்டுஉள்ள இடங்களை கண்டறியும் பணி, தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. குலசேகரமுடையார் - அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.
அவற்றை சரி செய்ய வேண்டும் என, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.