பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
12:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று காலை, சித்திரை பிரம்மோற்சவ விழா, கொடியேற்றம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில், நடப்பாண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது. நேற்று, காலை, 6:30 மணிக்கு, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கொடி மரம் எதிரில், உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து, இரவு கேடய வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வரும், 16ம் தேதி, தேர் உற்சவம், 17ம் தேதி, தெய்வானை திருக்கல்யாணம், 18ம் தேதி சண்முகர் உற்சவம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும், பிரம்மோற்சவம் நடக்கும், 11 நாட்களும், காலை மற்றும் மாலை வேளைகளில், உற்சவ பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.இரவு, மலைக்கோவிலில், திருத்தணி முருகன் திருவடிசபை சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.