ஆழ்வார்குறிச்சி :பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டர்வர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. நெல்லை மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தென்தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கியிருந்து சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்தஆண்டு கந்தூரி விழா கடந்த 23ம் தேதி மதியம் 2 மணியளவில் கீழூர் ஜமாத் நிறைபிறை கொடி ஊர்வலத்துடன் துவங்கியது. கடந்த 3ம் தேதி பச்சைகளை ஊர்வலமும், 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்பிஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும் நடந்தது. 2 மணிக்கு மேலூர் ஜமாத் 10ம் இரவு கொடி ஊர்வலம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு ரவணசமுத்திரத்தில் இருந்து மேளதாளங்கள், வீர விளையாட்டுக்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. நேற்று அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் பொட்டல்புதூர் வந்தது. சந்தனக்கூடு ஊர்வலம் பள்ளிவாசல் வந்ததும் இனாம்தார் எஸ்பிஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடந்தது. மாலை தீப அலங்கார திடலில் தீப அலங்கார வைபவம் நடந்தது. நாளை (7ம் தேதி) 14ம் இரவு சிறப்பு வைபவமும், ராத்திபு ஓதுதலும் நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுவாமி கம் முத்தவல்லி இனாம்தார் எஸ்பிஷா தலைமையில் வக்கீல்கள் முகம்மது ரபீக், சம்சுதீன் முன்னிலையில் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மேனேஜிங் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.