பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தயாராகிறது வெள்ளித்தேர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 10:03
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை துவங்குவதையொட்டி, வெள்ளி தேரை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி முதல் இன்று (6ம் தேதி) வரை விரதமிருக்கும் பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்டம் நிகழ்ச்சி நாளை (7ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி, அம்மன் எழுந்தருளும் வெள்ளி தேரும், விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும் தயார்படுத்தும் பணி வேகமாக நடக்கிறது. வெள்ளி தேர் முழுவதும் புதிதாக "பாலீஷ் செய்யப்பட்டு, தேரில் உள்ள சிலைகள் சுத்தம் செய்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. தேர் சக்கரங்களுக்கு "கிரீஸ் போட்டு தேர் சக்கரம் தயார்படுத்தும் பணி நடக்கிறது. இதன்பின், இரவு நேரத்தில் தேர் முழுவதும் ஜொலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. மரத்தேர் முழுவதும் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. தேரில், விநாயகர் எழுந்தருளும் இடம், மேல் பாகம் ஆகியவை முழுவதும் சுத்தம் செய்து புது பொலிவுடன் காணப்படுகிறது. கோவில் செயல் அலுவலர் நாகையா கூறியதாவது: தேர் திருவிழா 7ம் தேதி துவங்கவுள்ளதையடுத்து, தேர் முழுவதும் சுத்தம் செய்து தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) தேரின் சக்கரம் வலுவானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்த பின் தேர் அலங்கரிக்கும் பணி நடக்கும். வரும் ஏழாம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் முடிந்தவுடன், அம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் தேரோட்ட நிகழ்ச்சியும் துவங்கவுள்ளது. வரும் ஒன்பதாம் தேதி தேர் நிலை வந்தடைகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடக்கிறது என்றார்.