அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழசின்னணம்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயிலின் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது.
இதில் முதல் நாள் கருப்பசாமி, அய்யனார் சாமியை கண்மாயில் வைத்து அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் கோவில் வந்து சேர்ந்தது. இரண்டாம் நாள் பூப்பெட்டி, நகை பெட்டிகளுடன் மேளதாளம் முழங்க முளைப்பாரிகளுடன் முத்தாலம்மனை, கிராம மக்கள் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.பின் சர்வ அலங்காரத்தில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காளியம்மனுக்கு கரகம் ஜோடித்து சன்னதி வந்தடைந்தது. தொடர்ந்து கிராமபொங்கல் வைத்தல் உட்பட பல்வேறு நேர்த்திகடன்களை பக்தர்கள் செலுத்தினர். மேலும் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் முத்தாலம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். பின் மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுற்றது.