பதிவு செய்த நாள்
14
ஏப்
2019
02:04
தமிழர்களின், மிக முக்கிய பண்டிகை, மரபு மீறாத வழிபாடு, வாழ்வியல் கொண்டாட்டம், அறிவியலோடு பிணைந்த ஆன்மிக செயல்பாடு என, நாம் சொல்லும் அளவிற்கு சிறப்பு வாய்ந்த தினம் இன்று! இந்த, தமிழ் புத்தாண்டு, ஏப்., 14ம் நாள், சித்திரை முதல் நாளாய், விகாரி வருடம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது.
பொங்கல் பண்டிகை தான், தமிழ் புத்தாண்டு என, ஒரு குழு தனியாக கூறி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் பொங்கல் நாளே தமிழ் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது. அதன் பின் வந்த ஆட்சியின் போது, அது, மீண்டும் ஏப்., 14ம் தேதிக்கு தமிழ் புத்தாண்டு பண்டிகை மாற்றப்பட்டது. தமிழ் புத்தாண்டு என்பது, எந்த நாள் என்பதை, பெரும் விவாதத்திற்கு பின் தான், நாம் முடிவு செய்ய வேண்டும். அது வரை, இதில் எதை நீங்கள் தமிழ் புத்தாண்டு என்று ஏற்கின்றீரோ, அன்றே நீங்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம். இரு பஞ்சாங்கங்கள் அடிப்படையில் இந்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.
வசந்த காலம்:
புத்தாண்டு அன்று, வாசலை சுத்தம் செய்து, அலங்கரித்து, கோலமிட்டு அழகுபடுத்துவர். வாயிற்படிகளுக்கு, மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி, மங்கலம் சேர்ப்பர். இவ்வாறு செய்தால், திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்த தட்டை, வழிபாட்டறையில் வைத்து, தெய்வங்களின் திருவுருவப்படத்துடன், புத்தாண்டு அதிகாலையில் காண்பது, புனிதமாக கருதப்படுகிறது. கல்வி, செல்வம், வீரம் மூன்றுக்கும் அதிதேவதைகள் வீற்றிருக்கும் உள்ளங்கையை தரிசித்தால், அன்று முழுவதும் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கண்ணாடி, தண்ணீர், கோவில் கோபுரம் போன்றவற்றையும் எழுந்தவுடன் பார்ப்பர்.
கசப்பும் இனிப்பும்:
மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும், கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப் பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும். சித்திரை மாதம் பிறந்ததுமே, இளவேனிற்காலம் என்னும் வசந்த காலம் துவங்குகிறது. வசந்த காலத்தில், மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம், வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.
கேரளா - விஷுக் கணி:
இங்கு சூர்ய கதியைப் பின்பற்றியே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பங்குனி மாத கடைசி நாள், இரவு பூஜை அறையில், சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில், முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து, இரு புறமும் குத்து விளக்கு வைப்பர். தாம்பூலத்தில், பூ, பழம், வெற்றிலை பாக்கும், அரிசி, பருப்பு, தங்க, வெள்ளிகாசுகள் ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பூலத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை, வீட்டின் மூத்தவர் குத்து விளக்கேற்றி, சுவாமியை வணங்கிய பின், வீட்டில் உள்ளவர்களை, வயதுப்படி கண்மூடி வரச் செய்து, கண் திறந்து காண வைப்பது தான் விஷூக்கணி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவர். இதை கை நீட்டம் என்பர். அவரிடம் ஆசியும் பெறுவர். நீராடி புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி, அனைவரும் சேர்ந்து அறுசுவை உணவு உண்பர்.
ஆந்திரா -- யுகாதி:
ஆந்திராவில், புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படிப்பதை அரசு விழாவாகவே நடத்துவர். மாநில முதல்வர், அரசு அதிகாரிகள் முன், பிறக்கும் இந்த புது ஆண்டு, மிக அமைதியாய், சிறப்பாய் அமைய வேண்டி பஞ்சாங்க குறிப்புகளை அனைவரும் கேட்கும் வண்ணம் சத்தமாய் படிப்பார். பூஜை அறையில் வைத்து பூ, பொட்டு இட்டு வழிபட்டு எடுத்து வந்த பஞ்சாங்கத்தை, ஒரு தேவதையாக எண்ணி வணங்கி அனைவரும் படிப்பர்.பஞ்சாங்கம் தானே என்று மிக மேலோட்டமாய் நினைக்க இயலாது. உலக மக்களின் வாழ்க்கை நலனை, முன்னதாகவே அறிந்துக் கொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என, ஐந்து அங்கங்களை கொண்டது. முதல் அங்கமான, திதியை அறிவதால் லட்சுமியின் அருளும், இரண்டாவதான வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும், மூன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீர்வதும், நான்காவதான யோகத்தை அறிவதால் நோயற்ற வாழ்வும், ஐந்தாவதான காரணத்தை அறிவதால் காரிய சித்தியும் உண்டாகும். திருமலை போல பெரிய கோவில்களிலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. பச்சை பச்சடி என்பது பாரம்பரியமாய் பரிமாறப்படும் உணவு.
கர்நாடகா - உகாதி:
இந்த ஆண்டு, ஏப்., 6ல் உகாதி கொண்டாடப்பட்டது. அன்று தான், பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள், பிரதமையில் கொண்டாடப்படும். சந்திரனின் முதல் பிறையிலிருந்து துவங்கும். அன்று, அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட, மறுநாள் தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது நியதி. ஆலய வழிபாடும், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரிசளிப்பதும், இந்த நாளில் கண்டிப்பாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. பேவு பெல்லா என்கிற உகாதி பச்சடி என்கிற உணவு பிரசித்தம்.
நவீன மாற்றங்கள் மற்றும் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தற்போது, இப்படியான பண்டிகைகள் பெரும் மாற்றங்களோடு கொண்டாடப்பட்டாலும், நம் கலாசாரம் மற்றும் விசேஷங்களின் மீது, பயமும், பக்தி உணர்வும் குறையவில்லை என்பது, இந்த மாதிரியான சிறப்பு நாட்களின் மூலம் நிரூபிக்கப்படுகின்றன. நமக்கான பண்டிகைகளும், வழிபாடுகளும் நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தவும், பரஸ்பர உதவி செய்து, கூட்டாக வாழவும் தான் என்பதை புரிந்தவர்களுக்கான புத்தாண்டு தான், இந்த சித்திரை திருவிழா!
புராணத்தில் புத்தாண்டு பிறப்பு!
சூரியனை பூமி சுழலும் போது, 23.5 டிகிரி கோணத்தில் மாறி மாறிச் சுழலும். இதனால், பூமியில் சூரியன் இருக்கும் திசை, தென்புறத்தில் இருந்து வடபுறத்திற்கும், வடபுறத்தில் இருந்து தென் புறத்திற்கும் மாற்றி மாற்றி சுழலும். இவை தான் உத்ராயணம், தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. இதில், உத்ராயண காலத்தில் சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும், அதே போல, தட்சிணாயண காலத்தில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும். இதில் உத்ராயண காலம் என்பது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி காலமும், மற்ற மாதங்கள் தட்சிணாயண காலமும் ஆகும். உத்ராயண காலத்தின் துவக்கத்தை தான், தை பொங்கல் நாளாக கொண்டாடுகிறோம்.
இதனால் தான் இந்த நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பது, அதை வலியுறுத்துபவர்களின் வாதம். ஆனால் சித்திரை, 1ம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பவர்கள், சூரியன் சரியாக வடக்கிற்கும் தெற்கிற்கும் நடுவில் உதிக்கும் போது, சரியாக கிழக்கு திசையில் உதிக்கும் நாளை தான், தமிழ் புத்தாண்டு நாளாகும் என கூறுகின்றனர். ஆண்டிற்கு இரண்டு முறை தான் சூரியன் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும். அதில் ஒரு நாள் சித்திரை மற்றொரு நாள் புரட்டாசி.