உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் மண்வெட்டியால் உணவு கிளறி அன்னதானம் வழங்கும் நுாறாண்டுகளாக நடைபெறும் திருவிழா நேற்று நடந்தது. இங்குள்ள கண்மாய் மேல் கரை கோவிந்தன் கோயிலில் ஆண்டுதோறும் மதுரையில் அழகர் இருப்பிடம் வந்தடைந்தபின் அன்னதான விழா கொண்டாடப்படும்.
இந்த விழா நேற்று நடந்தது. 10 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 2000 கிலோ அரிசியில் சாதம் வடித்து மலை போல் குவித்தனர். வெள்ளை பூசணிக்காய் சாம்பார் மட்டும் பிரதானமாக இருக்கும். மூன்று வகை கூட்டுகள் இடம் பெறும். வீட்டுக்கு ஒரு பெண் காய் வெட்ட ஆண்கள் சமையல் செய்வார்கள். மாலையில் அன்னபூஜை செய்யப்பட்டது. பின்னர் மண்வெட்டியால் சாதம் எடுத்து அண்டாவில் கொட்டப்பட்டது. மாலை 6:00 மணி முதல் இரவு 11:30 வரை உணவு பரிமாறப்பட்டது. கோயில் நிர்வாகிகள் கூறுகையில் கோவிந்தன் கோடாங்கி என்பவரால் நுாறு ஆண்டுகளுக்கு முன் இந்த விழா துவக்கப்பட்டது. உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தபசு திருநாள் அன்று ‘திரி துவக்கம்’ செய்வோம். தொடர்ந்து 3 நாட்கள் கிராமங்களில் நெல் மிளகாய் புளி பருப்பு அரிசி தானம் பெறப்படும். நாடு செழிக்க நல்ல மழை பெய்ய விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது’ என்றனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.