பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
11:04
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் வந்து அம்மனை வழிபட்டனர். திருப்புத்துார் நகரின் தென் எல்லை தெய்வமாக பூமாயி அம்மன் கோயில் உள்ளது.
இங்கு பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மகேந்திரி, சாமுண்டி ஆகிய சப்தமாதாக்கள்எழுந்தருளியுள்ளனர். நடுநாயகமாக உள்ள வைஷ்ணவியே பூமாயி அம்மனாக பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் சித்திரையில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் சன்னதியில் அம்மனுக்கு அபி ஷேகம் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அம்மனுக்கு பட்டு எடுத்துவந்தனர்.
மேலும் பூத்தட்டுக்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்கள் பூச்சொரிந்து அம்மனை குளிர்வித்தனர். காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து சந்தனக் காப்பில் வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.இன்று அதிகாலை அம்மனுக்குபுஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்து பூச்சொரிதல் நடைபெறும். பின்னர் மாலையில் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.