பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
சவுக்கார்பேட்டை: வெங்கடேசப் பெருமாள் கோவில் மற்றும் தேர், உற்சவ வாகனங்கள் பராமரிப்பின்றி, சிதலமடைந்து வருகின்றன. அதன் மகத்துவம் உணர்ந்து, அறநிலைய துறை, கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுக்கார்பேட்டை, ஜெனரல் முத்தையா முதலி தெருவில், திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோவில், 38 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.பாகிஸ்தான், லாகூர் நகரில் இருந்து, 1800ல், சென்னைக்கு யாத்திரை வந்த லால்தாஸ் என்பவரால், இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், வடமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் வகையில், பைராகி மடம் ஒன்றையும் கட்டினார்.இக்கோவிலில் மூலவர், வெங்கடேச பெருமாளாகவும், உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாளாகவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் மூலவர், திருமலை மூலவர் போலவே காட்சியளிக்கிறார்.தெற்கில், பைராகி மடம், வடக்கில் புஷ்கரணி, அதையொட்டி, ஆஞ்சநேயர் சன்னிதியும் உள்ளன.
மேலும், ரங்கநாதர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், வாரகர், வரதராஜ பெருமாள், பாண்டு ரங்கர், பூரி ஜெகநாதர், பத்மாவதி தாயார் சன்னிதிகள் உள்ளன.திருமலையை போன்று, ஆண்டுதோறும், புரட்டாசி மாத பிரம்மோற்சவம், விமரிசையாக நடத்தப்படும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பராமரிப்பின்றி காணப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன், கோவில் தேர் பழுதடைந்தது. அதை பராமரிக்காமல் விட்டதால், திருவிழாக்களில், தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பிரம்மோற்சவம் நடக்கும், 10 நாட்களில், உற்சவர் வீதி உலா வரும் சேஷ, கருட, குதிரை, யாளி உள்ளிட்ட வாகனங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. கோவில் குளமும், பொலிவிழந்து காணப்படுகிறது.
கோவில் சுவர்களிலும், செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிப் பின்றி விரிசல் விழுந்துள்ளன. கோவில் வளாகத்தில் வரையப்பட்டுள்ள, பழமை வாய்ந்த சுவாமி ஓவியங்களும், சேதமடைந்து வருகின்றன.கடந்த, 2007ம் ஆண்டு சம்ரோக் ஷணத்திற்கு பின், இக்கோவில் பராமரிப்பு பணியை, அறநிலையத்துறை கைவிட்டதால், கோவிலின் நிலை, மோசமாக உள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், இக்கோவில் இருந்தும், எந்த பயனும் இல்லை. சேவார்த்திக்கள் சார்பில், கோவிலை புனரமைக்க தயாராக உள்ளோம். அதற்கும், அனுமதி கிடையாது. திருப்பதிக்கு நிகரான இக்கோவிலை, மீண்டும் புதுப்பொலிவுடன் மீட்க வேண்டியது, அறநிலையத் துறையின் கடமை என்பதை, அதிகாரிகள் உணர வேண்டும்.