அலங்காநல்லுார்: தமிழகத்தில் நீர் நிலைகள் வறண்ட நிலையில், மழை வேண்டி அனைத்து கோயில்களிலும் வருணஜபம் நடத்த அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டார்.
நேற்று அழகர்கோவிலில் நாராயணவாவி தெப்பக்குளம் அருகே வருண ஜபத்துடன் விசேஷ பூஜை நடந்தது. பின்னர் மழை வேண்டி புனித தீர்த்தம் தெப்பக்குளத்தில் அம்பி சுந்தரநாராயணன் பட்டர் தலைமையில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் சரவணப்பொய்கை ஆறுமுக சுவாமி சன்னதியில் கலசங்களில் புனிதநீர் நிரப்பி சிவாச்சாரியார்கள், பாடசாலை மாணவர்கள் விக்னேஷ்வர பூஜை, மூலமந்திரங்கள் கூறி பூஜை செய்தனர். கோயில் ஓதுவார் தேவாரம் பாடல்கள் பாடினார். புனிதநீர் சரவணபொய்கையில் தெளிக்கப்பட்டு பூஜை, பாராதனை நடந்தது.