பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
உடுமலை: தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், பழங்கால கோயில்களை புனரமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில், அனுப்பபட்ட கருத்துரு கிடப்பில் போடப்பட்டு, கோயில் கள் பரிதாப நிலையில் உள்ளன.
உடுமலை பகுதியில், அமராவதி மற்றும் உப்பாறு ஆற்றுபடுகை களில், பழங்கால கோயில்கள் அதிகளவு உள்ளன.முன்பு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்த, கோயில்கள் காலப்
போக்கில், போதிய பராமரிப்பின்றி, சேதமடைந்தன.
கோயில் முன்மண்டபம், முன்கோபுரம் உட்பட இடங்களில், மரங்கள் முளைவிட்டு, வேர்களால், இடைவெளி அதிகரித்து, சேதம் கூடுதலாகி வருகிறது. அமராவதி ஆற்றுப் படுகையான, கொழுமம், கொமரலிங்கம், கடத்தூர் உட்பட பகுதிகளிலுள்ள, பல கோயில் களும், உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், சோழீஸ்வரர் கோயில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோயில், கோட்டமங்கலம் வல்லக் கொண்டம்மன் கோயில் ஆகிய கோயில்களும் போதிய பராமரிப்பின்றி, முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோயில், கொழுமம் பெருமாள் கோயில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் புனரமைப்பு பணிகளுக்காக, தொல்லியல், துறை வழிகாட்டுதல் பெற்று, புதிய நடைமுறையின் கீழ் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறையினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தெரிவித்தனர்.
புதிய நடைமுறையால், கல்வெட்டுகள், பழங்கால சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயில் புதுப்பிப்பு பணிகளுக்காக, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழமை வாய்ந்த சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோயில், வல்லக் கொண்டம்மன்கோயில்கள் பரிதாப நிலையில் காணப்படுகின்றன.
அனைத்து பகுதிகளும் பொலிவிழந்து வருகிறது. கோயிலில் வழிபாடு செய்பவர்கால், சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்து அறநிலையத்துறை எந்த பணியையும் கண்டுகொள்வதில்லை. பழமையான கோயில்களின், கதவுகளை மாற்றக்கூட அத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வரலாற்று
ஆய்வாளர்கள் மற்றும் கிராம மக்களின் வேதனையாக உள்ளது.
நடப்பாண்டிலாது கோயில் புனரமைப்பு பணிகளை துவக்க அத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.