புதுச்சேரி:உழவர்கரையில் அமைந்துள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தோடு நேற்று (மே., 3ல்) துவங்கியது.அதனையொட்டி நேற்று (மே., 3ல்) காலை 6.30 மணிக்கு கொடியேற்றம், திருப்பலியை புதுச்சேரி - கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் துவக்கி வைத்தார்.
இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு மறைபரப்பு பணியில் அன்னை மரியாள் தலைப்பில் போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி செயலர் சுவாமிநாதன், திருச்சி ஹோலிகிராஸ் சபை செல்வராஜ் சொற்பொழிவு ஆற்றினர். பின், பெரிய தேர்பவனி நடந்தது. இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை சொற்பொழிவு, சிறிய தேர்பவனி நடக்கிறது.வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை பெரிய தேர்பவனியும், 12ம் தேதி காலை 7.00 மணிக்கு கூட்டு திருப்பலியும், மாலை ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.