பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
அந்தியூர்: செம்முனிச்சாமி கோவில் விழாவில், ஆயிரக்கணக் கான ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்தியூரை அடுத்த, பட்லூரில், பழமை வாய்ந்த செம்முனிச்சாமி கோவிலில், நடப்பாண்டு சித்திரை விழா, சித்திரை முதல் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமிக்கு, பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டது. முக்கிய விழாவான, குட்டிக்குடி விழா நேற்று (மே., 3ல்) நடந்தது.
இதையொட்டி நேற்று (மே., 3ல்) காலை, கோவில் மடப்பள்ளியில் இருந்து, பல்லக்கில் பச்சைநாயகி அம்மன், தனித்தனியாக செம்முனிச்சுவாமி, வாமினி சுவாமி, தேரில் அலங்கரிக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அதையடுத்து குட்டி குடி விழா எனும், ஆடுகளை பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, ஆரோக்கியத்துடன் இருக்கவும், விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோய் தாக்கி மரணிக்காமல் இருக்கவும், ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் வழிபட்டனர். வெள்ளித்திருப்பூர், பட்லூர், பூனாச்சி, பூதப்பாடி, மாத்தூர், ஈரோடு என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து, ஆடுகளை பலியிடும் நிகழ்வு தொடங்கியது.
தலைமை பூசாரிகள், பலியிடப்பட்டகிடாக்களின் ரத்தத்தை குடித்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பவானி டி.எஸ்.பி., சார்லஸ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.