பதிவு செய்த நாள்
09
மே
2019
02:05
ஓசூர் : சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலை, நேற்று (மே., 8ல்), கர்நாடக மாநிலம் நோக்கி புறப்பட்டு சென்றது.கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில் பிரதிஷ்டை செய்ய, திருவண்ணாமலையில் இருந்து, கார்கோ லாரியில் எடுத்து செல்லப்படும் கோதண்டராமர் சிலை, பல்வேறு போராட்டங்களுக்கு இடையில், பயணித்து வருகிறது.அதிகாரிகள் அனுமதிக்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையோரம், முனீஸ்வரன் கோவில் அருகே, 83 நாட்களாக, நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்தது.
அனுமதி கிடைத்து, கடந்த, 3ம் தேதி மாலை லாரி கிளம்பியது. சின்னாறு பகுதியில், தற்காலிக சாலையை கடந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் முன்பாக இருந்த மேடான பகுதியில், லாரி சிக்கியது. மேலும், லாரி வாடகையிலும் பிரச்னை ஏற்பட்டதால், சிலையின் பயணம்
தடைப்பட்டது.எல்லாம் சரி செய்யப்பட்டு, நேற்று (மே., 8ல்) காலை, 8:00 மணிக்கு, சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கர்நாடக மாநிலம் நோக்கி, கோதண்டராமர் சிலை புறப்பட்டது. நேற்று (மே., 8ல்) மாலை, கோனேரிப்பள்ளியை சிலை அடைந்தது.
கோதண்டராமர் சிலை, 350 டன் எடைக்கு மேல் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது கொண்டு செல்லாமல், பாலத்தின் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தான், கொண்டு செல்லப்படுகிறது.