மதுரை: மாநிலத்தில் அனைத்து கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:தேனி மாவட்டம் சுருளி மலையில் பூதநாராயணசுவாமி கோயில் உள்ளது. இங்கு கொள்ளை முயற்சி நடந்தது. பூஜாரியை தாக்கி கொலை செய்தனர்.
அம்மாவட்டத்தில் பல கோயில்களில் திருட்டுக்கள் நடந்துள்ளன.மாநிலத்தில் 20 ஆண்டுகளில் கோயில்களில் நடந்த கொலை, கொள்ளை குறித்து பதிவான வழக்குகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
திருட்டை கண்காணிக்கத் தவறிய மற்றும் உரிய விசாரணை மேற்கொள்ளாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோயில்களில் கண்காணிப்புக் கேமராக்கள் எந்நேரமும் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். குற்றங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான கோயில்களில் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இரவுக் காவல் பணியில் உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு முறையான சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.
மாநிலத்தில் அனைத்து கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி அமர்வு தமிழக உள்துறை செயலாளர், அறநிலையத் துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்கள் ஒத்திவைத்தது.